ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி விறுவிறுப்பு கீழவாசல் சந்தை கடைகள் டிசம்பர் 14 முதல் இயங்காது

தஞ்சை, நவ. 22: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை கீழவாசல் சரபோஜி சந்தையில் தற்போதுள்ள கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டப்படுவதால் டிசம்பர் 14ம் தேதி முதல் கடைகள் இயங்காது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து அதற்கான அறிவிப்பு பலகையை வைத்துள்ளது. மராட்டியர்கள் தஞ்சாவூரை ஆண்டபோது குஜராத்தை சேர்ந்த வணிகர்கள் அரண்மனை கீழகோட்டை சுவர், அகழி அருகே துணி மற்றும் வாசன பொருட்களை விற்பனை செய்தனர். பின்னர் அந்த இடத்துக்கு “குஜிலி மார்க்கெட்” என பெயர் வைத்தனர். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர் காலத்தில் சரபோஜி சந்தை என பெயரிடப்பட்டது.

இந்த சந்தையில் மளிகை பொருட்கள், எண்ணெய், நாட்டு மருந்துகள், காய்கறி உள்ளிட்ட அனைத்துவகை பொருட்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் 356 கடைகள் உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சரபோஜி சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு அங்கு ரூ.14.59 கோடி மதிப்பில் புதிதாக கடைகள் கட்டப்படவுள்ளது. இதற்கிடையில் சரபோஜி சந்தை வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடைகள் கட்டப்படும் வரை மாநகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும். கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின் பொதுப்பணித்துறையின் அன்றைய மதிப்பின்படி கடைகளை தற்போது உள்ள வணிகர்களுக்கே வழங்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக டிசம்பர் 13ம் தேதிக்குள் கடைகளை வணிகர்கள் காலி செய்து விட வேண்டும். அதற்குள் இருநபர் பெஞ்சுக்கு மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம் என உத்தரவிட்டனர். இதையடுத்து இருநபர் பெஞ்சுக்கு வணிகர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கிடையில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறவுள்ளதால் டிசம்பர் 14ம் தேதி முதல் சரபோஜி சந்தை இயங்காது என அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் சரபோஜி சந்தை வணிகர்கள் சங்க தலைவர் பால்ராஜ் கூறியதாவது: சரபோஜி சந்தையில் 356 கடைகள் உள்ளன. இதில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வணிகர்கள் வங்கி கடனாக சுமார் 100 கோடி ரூபாய் கடன் பெற்று தொழிலை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் இங்கு சராசரியாக 70 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு ரூ.60 லட்சம் ஏலம் மூலம் வருவாய் கொடுத்து வருகிறோம். இங்கு மாநகராட்சிக்கு எந்த பணியும் கிடையாது. வாகன வசூல் ஏலதாரர் மூலமே அனைத்து துப்புரவு மற்றும் சுகாதார பணிகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் சந்தையில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் வணிகர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திகைத்துபோய் உள்ளனர். வங்கி கடனை எப்படி செலுத்துவது என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடைகள் கட்டும் வரை மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடமாக காமராஜர் சந்தைக்கு தற்காலிக இடம் வழங்கிய காவேரி நகர் இடத்திலேயே எங்களுக்கும் கடைகள் வழங்க வேண்டும். சரபோஜி சந்தையில் கடைகள் கட்டிய பின்னர் எங்களுக்கு பொதுப்பணித்துறை மதிப்பீட்டின்படி கடைகள் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories:

>