ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு பொது விநியோக திட்டத்துக்காக 1,300 டன் அரிசி மூட்டை வந்தது

தஞ்சை, நவ. 22: பொது விநியோக திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் தஞ்சைக்கு 1,300 டன் அரிசி வந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் விளங்குகிறது. இங்கு சம்பா, தாளடி, குறுவை என மூன்று வகை நெல் சாகுபடி செய்யப்படும். மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். இப்படி விளைவிக்கப்படும் நெல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படும். அவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது வினியோக திட்டத்துக்காக அனுப்பப்படும். இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பொதுவிநியோக திட்டத்துக்கு பயன்படுத்துவதற்காக அரிசி மூட்டைகள் வருவது வழக்கம்.அதன்படி நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 1,300 டன் அரிசி மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. மொத்தம் 21 வேகன்களில் வந்த இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. பின்னர் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பொது விநியோக திட்டத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: