100 ஆண்டுகளாக நடைபெறவில்லை பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தை மாதம் தெப்ப திருவிழா நடத்தப்படுமா?

கும்பகோணம், நவ. 22: பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா 100 ஆண்டுகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டு தை மாதம் தெப்ப திருவிழா நடத்தப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. வாலியை கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை ராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கி கொண்டார்.

இந்த கோயிலில் 5 நந்திகள் அனைத்தும் சன்னதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய கோயில்களில் உள்ள இறைவனை பணிந்து மதியம் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்திபெருமானை விலகி இருக்க சொல்லி அருளிய சிறப்புடையது. இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் பிரசித்தி பெற்றதால் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, ஆனி மாதத்தில் நடைபெறும் முத்துபந்தல் விழா, மார்கழி மாத விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

400 ஆண்டுகளுக்கு முன் வீரபிரதாபதேவராயர் எனும் அரசனுக்கு குழந்தை பேறு இல்லாததால் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓராண்டு தங்கி இறைப்பணி செய்தார். பின்னர் குழந்தை பேறு கிடைத்தவுடன் தெப்ப திருவிழா நடத்த வேண்டும் என்று கோயிலின் கிழக்கு கோபுரம் முன் 3 ஏக்கர் பரப்பளவில் குளத்தை ஏற்படுத்தி திருமலைராஜன் ஆற்றிலிருந்து தண்ணீர வரும் பாதையை அமைத்து தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தெப்ப திருவிழாவை நடத்தியுள்ளார். பின்னர் காலப்போக்கில் தெப்ப திருவிழாவும் நின்று போனது, ஆற்றில் தண்ணீர் வராததாலும், பாதைகள் ஆக்கிரமித்திருந்ததாலும் குளத்துக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக தெப்ப திருவிழா நடைபெறாமல் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை சீர்படுத்தப்பட்டது. தற்போது திருமலைராஜன் ஆற்றில் தண்ணீர் வருவதாலும் மழை பெய்து வருவதாலும் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதை பயன்படுத்தி குளத்தில் உள்ள தண்ணீர் குறையாமல் வைத்து கொள்ள வேண்டும். மேலும் ராட்ஷத ஆழ்குழாய் மோட்டார் அமைத்து தண்ணீரை குளத்துக்கு விட்டு வந்தால் ஆற்றில் தண்ணீர் குறைந்தாலும் மோட்டார் தண்ணீரை கொண்டு தை மாதம் தெப்ப உற்சவத்தை நடத்த வாய்ப்புள்ளது.  எனவே தெப்ப திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>