கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வடியாத அவலம்

கும்பகோணம், நவ. 22: கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாகை, திருவாரூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினம்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் அரசு மருத்துவமனை அவசர பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு முன்பு மழைநீர் வடிவதற்கு இடமில்லாததால் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளது. தற்போது டெங்கு, மலேரியா மற்றும் மர்மகாய்ச்சல் உருவாகி வரும் நிலையில் கும்பகோணம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வந்தாலும் நோயை தீர்க்கும் தலைமை மருத்துவமனையின் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரால் நோய்களை உற்பத்தியாகும் மருத்துவமனையாக மாறி வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் நோயாளிகள், அவரது உறவினர்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: