புதர்கள் மண்டி கிடப்பதுடன் பெருமாண்டி பெரிய வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்

கும்பகோணம், நவ. 22: கும்பகோணம் அடுத்த பெருமாண்டி ஊராட்சியில் உள்ள பெரிய வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால் புதர்கள் மண்டி கிடப்பதுடன் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த பெருமாண்டி ஊராட்சியில் பெருமாண்டி பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மேலக்காவிரி காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து பெருமாண்டி, காமராஜா் நகர், கருப்பூர், கொண்டாங்குடி ஊராட்சியில் உள்ள கருப்பூர் வாய்க்காலுடன் 6 கிலோ மீட்டா் சென்று இணைந்து விடும்.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன் பல ஆயிரம் ஏக்கா் விவசாயத்துக்காக பயன்பட்டு வந்தது. நாளடைவில் வயல்களை அழித்து வீடுகள் கட்டப்பட்டதால் பெரிய வாய்க்காலின் அளவு சுருங்கி விட்டது. மேலும் காவிரி தண்ணீர் வந்தும் நீர்வரத்து பாதை ஆக்கிமிப்பால் வாயக்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

தற்போது வாய்க்கால் கழிவுநீர் செல்லும் இடமாகவும், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாகி மாறிவிட்டது. இதேநிலை நீடித்தால் வாய்க்கால் இருந்த வடுக்களே இல்லாமல் போய்விடும். பெருமாண்டி பெரிய வாய்க்காலை தூர்வார வேண்டுமென கலெக்டரிடம் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  இதையடுத்து அப்போதைய கலெக்டர், பொதுப்பணித்துறையினரிடம் உடனடியாக வாய்க்காலை தூர்வாருங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதுடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. இந்த வாய்க்காலில் அல்லி கொடி, வெங்காயத்தாமரை, கொடிகள் படா்ந்து இருப்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வசதியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவா–்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெருமாண்டி பெரிய வாய்க்காலை உடனடியாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: