×

இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தை அணுகி மக்கள் பயன்பெறலாம்

அரியலூர், நவ. 22: அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தில் பொதுமக்கள் அணுகி நிவாரணம் பெறலாம் என்று மருத்துவ தினவிழாவில் டாக்டர்கள் பேசினர். அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பில் இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமை வகித்தார். யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மைய மருத்துவர் முத்துக்குமார் வரவேற்று பேசுகையில், தமிழகத்தில் இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளுக்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே உடல்சார்ந்த மருத்துவத்தோடு யோகா பயிற்சிகளையும் அதிக அளவில் கற்று கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரியலூர் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையத்தில் மக்களுக்கு ஆயில் மசாஜ், அக்குபஞ்சர், நீராவி குளியல், மண் குளியல் உள்ளிட்ட பல வகையான சிகிச்சை வழங்கப்படுகிறது. இயற்கை காய்கறிகளை உணவில் சேர்த்து கொண்டு மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது குறித்தும் பொதுமக்களுக்கு கருத்தாக்கம் வழங்கப்படுகிறது என்றார்.மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ் பேசுகையில், நவீன காலத்தில் இயற்கை சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதிலிருந்து பொதுமக்கள் அதிக தூரம் விலகி சென்றுவிட்டனர். விரைவான வாழ்க்கையில் மக்களும் விரைவு உணவகங்களில் உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது உணர துவங்கியுள்ளனர். பண்டைய காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய இயற்கை தானியங்களான கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் உள்ளிட்ட உணவு பொருட்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் சார்ந்த தின்பண்டங்களை வழங்கும் முறைகள் வந்துள்ளது. இந்த மாற்றங்களால் பொதுமக்கள் வருங்காலங்களில் இயற்கை சார்ந்த மருத்துவங்களை நாடுவதற்கு இத்தகைய யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையங்கள் உதவி புரிகின்றன. அரியலூர் தலைமை மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையத்தில் ஒரு மாதத்துக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்வதே இதற்கு உதாரணம். அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தை அணுகி தங்களது உடல் சார்ந்த பிரச்னைகளை மருத்துவரிடம் கூறி நிவாரணம் பெறலாம் என்றார்.

மருத்துவர் மணிகண்டன் பேசுகையில், பழங்காலத்தில் பொதுமக்கள் மருந்தே உணவு என்ற வாழ்க்கையை மேற்கொண்டனர். சுவையான உணவு என்ற பெயரில் கலப்படம் கலந்த உணவுகளை உட்கொள்வதால் பொதுமக்களுக்கு ரத்த கேன்சர் அதிகளவில் வருகிறது. கண்கள் பாதிக்கப்பட்டு மூளை செயலிழந்து அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் அறிவுச்செல்வன், செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Natural Medicine Biology Center ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா