×

முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசர கதியில் சாலை பணி

முத்துப்பேட்டை, நவ.22:முத்துப்பேட்டை பகுதியில் ரூ.98 லட்சத்தில் அமைக்கப்படும் சாலை பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசர அவசரமாக நடப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை சாலை 5வார்டுகளை இணைக்கும் முக்கிய சாலையானது. பங்களாவாசல் முதல் பேட்டை வரையிலான சுமார் ஒரு 1.80கிலோ மீட்டர் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலை ஆகும். முன்பு தார் சாலையாக இருந்த இந்த சாலை சேதமாகியதால் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலையாக போடப்பட்டது. சாலை தரமில்லாமல் முறையாக போடாததால் சாலைப் பணி முடிந்த அடுத்த மாதங்களிலேயே சிமெண்ட் சாலையும் சேதமாகியது. இதை தொடர்ந்து சேதமான சாலையை பணி எடுத்த ஒப்பந்தக்காரர்கள் திட்டமதிப்பீட்டில் உள்ளதுபடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் சாலை முழுவதும் முற்றிலும் பள்ளம் படுங்குழியாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் போவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் படுமோசமாக மாறியது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து பேரூராட்சி சார்பில் சென்றாண்டு சுமார் ரூ.98 லட்சம் செலவில் மீண்டும் தார் சாலையாக போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதில் இந்த சாலை சாலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தால் அதிரடியாக சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை பணி நடந்து வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சுவர் இடிந்து பலியானார். இதனையடுத்து சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

இதுகுறித்து தினகரனில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து போராட்டம் அறிவித்த அமைப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சாலையின் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை கண்டறிந்து அளவீடு செய்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தடை தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் சாலைப்பணிகளுக்கு இடையூறாக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியன உள்ளது. அவற்றையும் அகற்றினால் பணிகளை தொடங்க முடியும் என, தெரிவித்திருந்த பேரூராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் மீண்டும் அதிரடியாககுட்டியார் பள்ளி அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினர்.

மற்றவை படிப்படியாக அகற்றப்படுமென தெரிவித்த நிலையில் அவற்றை அகற்றாமலேயே கடந்த வாரம் சாலைப்பணிகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து சாலைநெடுக எம்சாண்ட் கலந்த ஜல்லி கலவையை பரவி பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சாலையோர கழிவுநீர் வடிகால் கட்டுமானப்பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. சாலைப்பணி தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்பகுதியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகளை தொடர்ந்தால் போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாக இணைப்புசாலை பயன்படும். மேலும் தேவையான இடங்களில் பெரிய சிமெண்ட் பைப் இணைத்து கழிவுநீர் வெளியேற ஏற்பாடும் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் கோரையாற்றில் நேரடியாக திறந்துவிடப்பட்டு ஆற்றுநீர் மாசடைந்துள்ளது. இதனால் ஆற்றில் மீன் இனப்பெருக்கம் அடியோடு அழிந்துவிட்டது. இதன் தாக்கம் கடல் முகத்துவாரம் வரையிலும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது. எனவே கழிவுநீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள சுமார் 1.8 கிலோ மீட்டர் தூர சாலையில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகள், சாலை நடுவில் உள்ள மின்கம்பங்கள் இன்றளவிலும் அகற்றபடவில்லை. எனவே அதிகாரிகள் சாலையின் இருபுறமும் ஏற்கனவே அளவீடு செய்தவாறு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும், வடிகால் பணிகளையும் துரிதமாக தொடங்கி நிறைவு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ் கூறுகையில் ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.

Tags : emergency room ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் அவசர கதியில் நடக்கும் சார்பு நீதிமன்ற பணி