×

ஆலங்குடி குருகோயிலில் சுகாதார வளாகம் இல்லாததால் தினந்தோறும் பக்தர்கள் அவதி

வலங்கைமான், நவ.22: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் சோழநாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஸ்தலங்களில் 98வது ஸ்தலமாக விளங்கி வருகிறது. இது நவகிரகங்களில் குருபரிகாரஸ்தலமாக விளங்குகிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் நாளில் நடைபெறும் குருப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். மேலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருக்கோயிலில் குருபெயர்ச்சிக்கு முன், குருப்பெயர்சிக்கு பின் என இரண்டு கட்டங்களாக நடைபெறும் லட்சார்சனை விழா காலங்களிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். குருபகவானுக்க உகந்த நாளாக கருதப்படும் வியாழக்கிழமை மற்றும் இதர நாட்களிலும் அதிகஅளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் குருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லாத நிலை உள்ளது. குருபெயர்ச்சி போன்ற விழா காலங்களில் மட்டும் கிராம ஊராட்சியின் சார்பில் தற்காலிக கழிவறைகள் பெயரளவில் அமைக்கப்படுகிறது. அவை போதிய பாதுகாப்பற்ற நிலையிலும், போதிய தண்ணீர் வசதி இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையில் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கும். எனவே குருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நலன்கருதி கிராம ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பொது சுகாதார வளாகம் அமைத்துதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : devotees ,Alangudi gurukoil ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி