×

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட 248 பேருக்கு திருமண உதவித்தொகை

திருவாரூர், நவ.22: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்டுப்போன 248 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையினை அமைச்சர் காமராஜ் நேற்று வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 10 ஒன்றியங்களை சேர்ந்த மொத்தம் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இருப்பினும் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல மற்றும் வலங்கைமான் உட்பட பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பபட்டதாக கூறப்பட்டது.

மேலும் இந்த திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கபட்டு 2 ஆண்டுகளை கடந்த பின்னர்தான் உதவி தொகை வழங்கப்படுவது குறித்தும், இதற்காக வட்டிக்கு பணம் பெற்று திருமணம் நடத்தியவர்களுக்கு கடன் சுமை அதிகரித்து வருகிறது. மேலும், இந்த திட்டமானது நிதி இல்லாமல் தள்ளாடி வருவது மற்றும் திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக இதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது போன்றவை குறித்து கடந்த 19ம் தேதி தினகரனில் சிறப்பு செய்தியாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து 2 தினங்களுக்குள் விடுபட்டு போனவர்களுக்கு இந்த திருமண உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதன்பேரில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருமண உதவித் தொகையாக விடுபட்டு போன 248 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதற்கு காரணமான தினகரன் நாளிதழுக்கு பயனாளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : persons ,district ,Thiruvarur ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்