×

விவசாயிகள் உரிய நேரத்தில் களைகளை கட்டுப்படுத்தினால் உரமிடுவது பயிருக்கே கிடைக்கும்

வலங்கைமான், நவ.22: வலங்கைமான் வட்டார விவசாயிகள் உரிய நேரத்தில் களைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் இடும் உரம் முழுவதும் பயிருக்கே கிடைக்கும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் தனது செய்தி குறிப்பில் செய்தி குறிப்பில் கூறியதாவது:
நெல்லில் களை நிர்வாகம் என்பது நாம் சாகுபடி செய்துள்ள தனிப்பயிரில், அதாவது நெல் வயலில் நெல்லைத் தவிர தோன்றும் அனைத்து வகையான செடிகளும் களைகள் ஆகும். இதனை அகற்றி பயிரை காப்பதுதான் களை நிர்வாகம் என்பதாகும். நாம் சாகுபடி செய்துள்ள நெல் வயலில் கூடவே களைகளும் முளைத்திடும். அவை நெல்லுடன் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கனவே நிலத்திலிருக்கும் சத்துக்களை எடுப்பதுடன் நாம் இடும் அடியுரம் மற்றும் மேலுரம் இவற்றையும் அதிக அளவில் எடுத்துக்கொண்டு களைகள் நன்றாக வளர்வதுடன் நெல் பயிருக்கு கிடைக்க வேண்டிய உரம் மற்றும் இதர சத்துக்களும் கிடைக்காமல் போகிறது. மேலும் சூரிய வெளிச்சம், காற்றோட்டம், இவைகளும் நெல் பயிருக்கு கிடைப்பது தடையாகிறது. களைகள் பூச்சி மற்றும் நோய்களின் இருப்பிடமாகவும் இருக்கிறது.

எனவே வயலில் களைகள் சிறிய அளவில் தோன்றும் போதே கை களைகள் எடுப்பதன் மூலம் மேலே குறிப்பிட்ட இடையூறுகள் தவிர்க்கப்படும். இயந்திர நடவு முறை செய்துள்ள வயலில் கோனோவீடர் என்னும் களை எடுக்கும் கருவி பயன்படுத்துவதன் மூலம் மண் கிளரிவிடப்பட்டு பழைய வேர்கள் அறுப்பட்டு புதிய இளம் வேர்கள் உண்டாகும். இதனால் நிலத்திலிருந்து விரைவாகவும் அதிகமாகவும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்கின்றன. களை எடுக்கும் கருவி நட்ட 10 லிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையும் அடுத்த 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 முறை களை எடுத்தால் களைகள் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி நாம் இடும் உரம் முழுவதும் பயிருக்கே கிடைக்கும் என வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறினார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து