×

அடிப்படை வசதி செய்து தரக்கோரி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

முத்துப்பேட்டை, நவ.22: முத்துப்பேட்டையில் அடிப்படை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் பைப்பாஸ் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை பல ஆண்டுகளாக நரிகுறவர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்த இடத்திற்கு கடந்த 2005ம் ஆண்டு அரசு சார்பில் நரிகுறவர் குடும்பத்தை சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு மழை மற்றும் வௌ்ளக்காலங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்பை சூழ்ந்ததால், தாழ்வாக இருந்த இந்த இடத்தை மண் கொண்டு உயர்த்தி வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரிகள், தாலுகா அலுவலகம், பொது பணித்துறை அலுவலகம் போன்றவைகள் கட்ட அந்த இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு குடியிருந்த 24 குடும்பங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் அதேபகுதியில் உள்ள நம்மங்குறிச்சி சாலையில் ஓரிடத்தை தேர்வு செய்து தாங்கள் குடியிருப்புகளை மாற்றிக்கொள்ளும் படியும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் கூறி உள்ளனர். இதனை நம்பி அந்த மக்களும் குடியிருப்பை காலி செய்து மாறிக் கொண்டனர்.

ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு தற்பொழுது உள்ள இடத்திற்கு பட்டாவும் வழங்கவில்லை. அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விச பூச்சிகள், பாம்புகளின் தொல்லைகளுடன் குழந்தைகளை வைத்து கொண்டு வசிக்கும் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து கலெக்டர், தாசில்தார் உட்பட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் நேரில் முறையிட்டும் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சென்றாண்டு முத்துப்பேட்டை பகுதியை தாக்கிய கஜா புயல் இந்த நரிகுறவர்கள் குடியிருப்புகளையும் புரட்டி போட்டது. அதில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியாத நிலையில் கடந்த சில வாரமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து குடியிருப்புகள் முழுவதும் முழங்கால் அளவில் தண்ணீர் சூழ்ந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாதளவில் போனது.தற்பொழுது தண்ணீர் வடிந்து விட்டாலும், நடைப்பாதையும் சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடந்துகூட செல்லமுடியாதபடி உள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த நரிகுறவர்கள் குடும்பத்தை சேர்ந்த முருகேஷ் தலைமையில் இளைஞர்கள், இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சதிஷ்குமார், கோவிலூர் ராஜேஷ் உட்பட பலர் திரண்டு நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சியை முற்றுகையிட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சியில் பணியில் இருந்த இரண்டாம் நிலை அலுவலர் செல்வகுமாரிடம் தாங்களின் கோரிக்கை குறித்து மனுவை கொடுத்தனர். இதில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் சாலையை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் செல்வகுமார், செயல்அலுவலர் கவனத்திற்கு எடுத்து சென்று சரி செய்து தரப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Muttupettai ,
× RELATED முத்துப்பேட்டையில் காணிக்கை அன்னை ஆலய தேர்பவனி