×

புதிதாக மீட்டர் பொருத்தியும் குடிநீர் வினியோகம் சீராகாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

கரூர், நவ. 22: புதிதாக மீட்டர் பொருத்தியும் குடிநீர் விநியோகம் சீராகவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
கரூர், தாந்தோணி, இனாம் கரூர் நகராட்சிகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலின்போது இணைக்கப்பட்டு 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தனித்தனி நகராட்சிகளாக இருந்தபோது தனித்தனி காவிரி கூடுதல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்தன. கரூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. தாந்தோணிமலை கூடுதல் குடிநீர் திட்டமும் பயன்பாட்டிற்கு வந்து விட்டதாகவும், இனாம் கரூர் நகர பகுதியில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

தாந்தோணி பகுதி ஒருங்கிணைந்த கரூர் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் இப்பகுதியில் மட்டும் 18 வார்டுகள் உள்ளன. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், மாவட்ட காவல் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. அரசுத்துறை அலுவலகங்கள், தொழிலகங்கள், ஊழியர்கள் அதிகம் உள்ள இப்பகுதிக்கு காவிரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு 1998ம் வருடம் இரண்டு நீர் உறிஞ்சு கிணறு மூலம் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து 30.50 கிமீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கூடுதல் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. புதிய திட்டத்தின்படி படி பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் மற்றும் தினமும் வந்து செல்லும் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 20 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும் திட்டத்தில் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் அதிகாரிகள் தரப்பில் 2025ம் ஆண்டு மக்கள் தொகை 82,900, மற்றும் 1,01,600 என கணக்கிடப்பட்டு இடைக்காலம் மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே நாள் ஒன்றுக்கு 13.19 மில்லியன் லிட்டரும் மற்றும் 16.16 மில்லியன் லிட்டரும் வழங்க வகை செய்யபட்டுள்ளது.
கட்டளை அருகில் காவிரியாற்றில் 6.0 மீ விட்டமும் 11மீட்டர் ஆழமும் உளள ஒரு புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. டர்பைன் மின் மோட்டார்கள் மூலம் 15839 மீட்டர் நீள குழாய்களின் மூலம் புதியதாக பொன்நகரில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து 18800 மீட்டர் நீளமுள்ள நீர்உந்து குழாய்களின் வழியாக திறந்தவெளி கிணறு மின்மோட்டார் மூலம் ஏற்கனவே உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும், புதிதாக கட்டப்பட்டுள்ள 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் குடி நீரேற்றம் செய்து விநியோகம் செய்ய பணிகள் நடைபெறுகிறது. புதிய திட்டத்தின்படி புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தப்படும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும், ஒருநாள் விட்டு ஒருநாள் கூட குடிநீர் விநியோகிக்க முடியும் என்றனர்.

எனினும் ஏற்கனவே வந்ததை விட குடிநீர் குறைந்த அளவுதான் வருகிறது என மக்கள் தெரிவித்தனர். 10 முதல் 13 நாட்களுக்கு ஒருமுறைதான் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வீட்டு இணைப்புகளுக்கு புதிதாக குழாய் அமைத்த பின்னர் முன்பு வந்ததை விட குறைந்த அளவாகவும். குறைந்த நேரமாகவும் இருக்கிறது. ஒருசில மணி நேரத்திலேயே தண்ணீர் நின்று போய் விடுகிறது. தண்ணீர் பயன்படுத்துகின்ற அளவைப் பொறுத்தவரை மின்சார கட்டணத்தைப்போல கட்டணம் செலுத்தும் நிலையில் தேவையான அளவுக்கு பயன்படுத்தி விட்டு குழாய் திருகை மூடி வைத்து விடுகின்றனர். எனினும் தண்ணீர் வரும் நேரமோ மிக குறைவாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பல தெருக்களில் பொதுக்குழாய் திருகு குழாய்கள் பழுதுகாரணமாகவும், குழாய் உடைப்பு கசிவு, தெருக்குழாய் அமைவிடத்தில் சிமெண்ட் மேடை கட்டாததாலும் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கண்டுகொள்ளப்படாத கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது உள்ளாட்சித்தேர்தல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பொதுமக்கள் ஏமாற்றம் கொக்கம்பட்டி...