×

குளச்சல் துறைமுகம் ₹16 கோடியில் விரிவாக்கம் மாநாட்டில் அமைச்சர் ஜெயகுமார் உறுதி

குளச்சல், நவ 22: குளச்சல் துறைமுகம் ₹16 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் உறுதி அளித்தார். உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்தார்.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, வசந்தகுமார் எம்பி,  தமிழக மீன்வளத் துறை இயக்குனர் சமீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில்  அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மீனவர்கள் துணிச்சல் மற்றும் வீரம் மிக்கவர்கள். அதிமுக அரசு மீனவர் ஒருவருக்கு வருடத்திற்கு ₹19 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்கி வருகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ₹30 கோடி  மீனவர்களுக்கு ஒதுக்கப் பட்டது .அதன் பிறகு படிப்படியாக  ரூ150 கோடி உயர்த்தப்பட்டது. 2016 பிறகு பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் 50 சதவீதம் குமரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. வேறு மாவட்ட மீனவர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்து மீன் பிடிக்க இயலாது. ஏனெனில் இங்கு கடலலை மிகவும் ஆக்ரோசமாக உள்ளது.  மீனவர்களின் சமூக நிலை, கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி மீனவ கிராமங்களில் என்ன என்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை கட்டமைக்கப்படும்.

மீனவ கிராமத்தில் துறைமுகம், தங்கு தளம், முகத்துவாரம் முக்கியமானவையாகும். தமிழகத்தில் 30 முகத்துவாரங்கள் ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆழப்படும் போது மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும் .அதாவது மீன் இனப்பெருக்கத்திற்காக முகத்துவாரத்துக்கு வரும். அதுபோல் பிற இடங்களில் கடல் அரிப்பு தடுக்கப்படும்.  மீன் பிடிப்பு பெருகும். குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிக்காக ₹16 கோடி ஒதுக்கப்படடுள்ளது. மேலும் கூடுதலாக படகுகள் நிறுத்தவும் ஏல கூடம் அமைக்கவும் ஆய்வு செய்யப்படும்.

 மீனவ இளைஞர்கள் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆக யாரும் இல்லை .எனவே ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் ஆக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு சென்னையில் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதனை குமரி மாவட்ட மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஓகி புயலில் காணாமல் போன மற்றும் பலியான மீனவர்களுக்கு ₹20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அதிமுக அரசு வழங்கியுள்ளது.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. ஆனால் கேரள அரசு அறிவித்ததை தவிர நிறைவேற்றவில்லை .மீனவர்கள் அளித்த கோரிக்கைகள் தொடர்பாக என்ன என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யும்படி மீன்வளத் துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.Tags : Pranab Mukherjee ,expansion conference ,Kulachal Port ,
× RELATED முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்...