×

ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

நாகர்கோவில், நவ.22: குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். குமரி மாவட்டம் குளச்சலில் நேற்று நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடலோர மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள் இருவரும் இரு கண்கள். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். சமூகம், கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. புதிய தங்குதளங்கள், மீன்பிடி துறைமுகங்கள் போன்றவை அமைத்துள்ளோம். மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிக நிதி ஒதுக்கப்படும். குமரி மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்போது பாதி பணம் இங்குதான் ஒதுக்கப்படுகிறது. மீனவர்களுக்கு கடல் பாசி வளர்த்தல், திறன்வளர்த்தல் ஆகியவை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விவசாயம் அல்லாத நிலங்களில் மீன் வளர்க்கும் திட்டம் உள்ளது. கடலில் மீன்பிடிக்க பாரம்பரிய மீனவர்களுக்கு எல்லையே இல்லை. இது தொடர்பாக பாண்டிச்சேரியில் துப்பாக்கிச் சூடே நடந்தது. கடல் நடுவே பிரச்னை வராமல் இருக்க எட்டரை கோடி ரூபாயில் மரைன் என்போர்ஸ் விங்க் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடலோர காவல் பணியில், காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய சட்டம் வரைவு நிலையில் இருக்கலாம். மீனவர்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்கும். ஓகி புயலின் போது ஹெலிகாப்டர் வசதி கேட்டிருக்கிறார்கள். ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளது. கேரளத்தை விட நாம் அட்வான்சாக இருக்கிறோம். இங்கு 5 படகுகளுக்கு ஒரு சேட்டிலைட் போன். ஆழ்கடல் செல்பவர்கள் அதிகமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்காக ஜி.பி.எஸ். கொடுக்கும் திட்டம் உள்ளது. கேரளத்தில் ஓ.கி புயலில் ரூ.20 லட்சம் இன்னும் கொடுக்கவில்லை. நாம் பணமும், வேலை வாய்ப்பும்கொடுத்தோம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பூர்வாங்க வேலை நடைபெற்று வருகிறது.2 தொகுதியில் இமாலய வெற்றி பெற்றுள்ளோம். வடக்கும் தெற்கும் அதிமுக வசம் உள்ளது. ரஜினி, கமல் இப்போது ஒன்றாக சேர்ந்தாலும் 2021-லும் நாங்கள்தான் வருவோம்.உள்ளாட்சி தேர்தலுக்கு எங்கள் கட்சியில் அதிகமாக பணம் கட்டுகிறார்கள். திமுகவில் விருப்பமனு நாள் அதிகரித்துள்ளனர். எங்களை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். 2014-ல் மறைமுக தேர்தல் நடந்தது. முறைகள் மாறும், மறைமுக தேர்தலால் கவுன்சிலர்களுக்கும் தலைவருக்கும் சண்டை வராது. ஜாதி, மத, மொழி, இன அரசியலுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. ஆன்மீக அரசியலும் மதம்தானே. இது திராவிட மண். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Minister Jeyakumar ,
× RELATED காவேரி மேலாண்மை ஆணையத்தின்...