×

சாலையோரம் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்

திருமயம்,நவ.22: அரிமளத்தில் சாலையோரம் நீண்ட நாட்கள் தேங்கி கிடக்கும் மழை நீரால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஒரு சில பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரிமளம், திருமயம் பகுதியில் பருவ மழை பொய்த போன நிலையில் இந்த வருடமாவது பருவ மழை கை கொடுக்குமா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே பருவ மழை வருடம்தோறும் ஏமாற்றியதால் வரத்து வாரிகள் பராமரிப்பதில் பொதுமக்கள், அரசு ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில பகுதிகளில் தன்னார்வலர்கள் வரத்து வாரிகள், குளங்களை சீரமைத்த நிலையில் பெரும்பாலான கிராம வரத்துவாரிகள், குளங்கள் கருவேல மரங்கள் மண்டி காடு போல் காணப்படுகிறது. இதனால் தற்போது பெய்த மழையால் அரிமளம் பகுதியில் உள்ள சாலையோரங்களில் மழை நீர் தூர்ந்துபோன வரத்துவாரிகளை கடக்க முடியாமல் நீண்ட நாட்களாக ஆங்காங்கே தேங்கி கிடைப்பதை காணமுடிகிறது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், கடைவீதி, 8ம் மண்டகப்படி,அரசு சுகாதார வளாகம் பகுதியில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறபடுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அரிமளம், ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், திருமயம், விராச்சிலை, புலிவலம், நமணசமுத்திரம் உள்ளிட்ட பகுகளில் சுமார் 20 நிமிடம் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையானது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்தது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...