×

பணிகள் முழுமை பெறாததால் சேவை மையக் கட்டிடம் கழிவறையாக மாறிய அவலம்

கொள்ளிடம், நவ.22: கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட சேவை மைய கட்டிட பணிகள் முழுமைபெறாததால் தற்போது கழிவறையாக மாறியுள்ளது. இதனை முழுமையாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சேவைமையக் கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் கட்டும் பணி முழுமை பெறாமல் தரைப்பகுதி போடாமல் அப்படியே அரைகுறையாக விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் ஒரு சேவைமையக் கட்டிடம் வீதம் நாடெங்கும் இக்கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் கட்டப்பட்டுள்ள சேவைமையக் கட்டிடமும் ஓரளவுக்கு இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வடகால் சேவைமையக் கட்டிடம் மட்டும் எந்த பயனுமின்றி அப்படியே திறந்தே கிடக்கிறது. ஆரம்ப காலத்தில் குடிமகன்கள் இதனை பாராக பயன்படுத்தி வந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இக்கட்டிடம் இன்று கழிவறை கட்டிடமாகவே காட்சியளிக்கிறது. கட்டிடத்திற்குள் செல்ல நினைத்தால், காலை வைக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் முன்பகுதிக்குச் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கட்டிடத்திற்குள் செல்ல முடியாதபடி சுற்றிலும் சீமைக்கருவேல முட்செடிகளும் வளர்ந்துள்ளன. இந்தக் கட்டிடம் ஒரு வவ்வால் மண்டபம் போல் உள்ளது. எத்தனையோ சேவை மையங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்த கட்டிடம் மட்டும் பயனற்றுக் கிடக்கிறது.

ஒவ்வொரு சேவை மையக் கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும்போது மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட பொருட்களும் தகவல் தொடர்பு மற்றும் ஊராட்சி சம்மந்தப்பட்ட அனைத்து வகையான புள்ளி விவரங்களை பதிவேற்றவும், ஊராட்சிக்கு அரசால் அனுப்பப்படும் தகவல்களை பெறவும் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையில் கணினியும் அரசால் வழங்கப்படும். ஆனால், வடகால் சேவை மையக் கட்டிடத்திற்கு உரிய பொருட்கள் வழங்கப்பட்டதா என்றும் பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத கழிவறையாகியுள்ள வடகால் சேவைமையக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்கவும், அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : service center building ,
× RELATED தா.பேட்டையில் நெசவாளர் சேவை மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை