×

கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு அரசே விலை கொடுத்து வாங்கி இலவச வீட்டுமனை வழங்க முடிவு

தரங்கம்பாடி, நவ.22: கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு அரசே விலை கொடுத்து வாங்கி இலவச வீட்டு மனையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம், திருக்கடையூரில் தரங்கம்பாடி வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகை கலெக்டர் பிரவின் பி.நாயர் தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி வரவேற்றார். பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் 1,113 பேருக்கு ரூ.8கோடியே 34லட்சத்து 8ஆயிரத்து 844 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் கோயில் இடங்களில் வசிப்பவர்கள் தான் அதிகம். கோயில் மனை என்பதால் அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியாத நிலை இருந்தது.

தமிழக முதலமைச்சர் அதிரடியாக முடிவெடுத்து கோயில் நிலங்களை அரசே விலை கொடுத்து வாங்கி இலவச வீட்டு மனையாக வழங்க முடிவு செய்துள்ளது. பெண்கள், பல்வேறு தனியார் அமைப்புகளிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள். அவைகளை தவிர்த்து கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்றால் 8 மாதத்திற்கு வட்டி கிடையாது. இவற்றை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த ஆண்டு கடன் மற்றும் நகை கடன் 6ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 8ஆயிரம் கோடிக்கு கடன் மற்றும் நகைகடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். நாகை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா நன்றி கூறினார்.

Tags : government ,residents ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்