×

குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகை, நவ.22: நாகை அருகே உத்தமசோழபுரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நாகை அருகே திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமசோழபுரம் ஊராட்சியில் 4க்கும் அதிகமான ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதால் பொதுமக்கள் குடிப்பதற்கு தேவையான தண்ணீரை கைபம்புகள் மூலம் கூட எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

உத்தமசோழபுரத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தினந்தோறும் பல லட்சம் குடிநீரை டேங்கர் லாரியில் ஏற்றி வேளாங்கண்ணி, வாஞ்சூர், காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து விஏஓ மற்றும் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டும் குறைந்து குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. ஊர் மக்கள் ஒன்று கூடி பல முறை தடுத்தால் அப்போதைக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்துவார்கள்.  அதன்பின்னர் வழக்கம் போல் தண்ணீர் எடுப்பதை தொடர்ந்து செய்வார்கள். நிலத்தடி நீர் மட்டம் குறைய, குறைய உப்பு நீராக எங்கள் பகுதி குடிநீர் மாறிவருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து எச்சரிக்கை செய்தனர்.  ஆனாலும் தொடர்ந்து நிலத்தடிநீரை எடுத்து வருகின்றனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் 3 மாத காலத்திற்கு முன்பு நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் பலன் ஏதும் இல்லை. இனிமேலும் டேங்கர் லாரியில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் எடுத்துச் செல்வதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்