×

வேலூரில் 2ம் நிலை காவலர் பணிக்கான முதற்கட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 800 பேருக்கு அழைப்பு

வேலூர், நவ.22: வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான 2ம் கட்ட உடற்தாங்கும் திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக 2ம் நிலை காவலர்களுக்கான தகுதித்தேர்வு கடந்த 6ம் தேதி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. 5 கட்டங்களாக நடந்த ஆண் காவலர்களுக்கான தேர்வில் 2,695 பேர் 2ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பெண் காவலர்களுக்கான தேர்வில் 834 பெண்கள் 2ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில், 2ம் கட்ட உடற்தாங்கும் திறன் தேர்வு நேற்று காலை தொடங்கியது. மொத்தம் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 700 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதை ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி பொறுப்பு விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘2ம் நிலை காவலர்களுக்கான தேர்வின் ஒரு பகுதியாக நடந்த முதற்கட்ட தேர்வில் 2,695 இளைஞர்கள், 834 பெண்கள் என மொத்தம் 3,429 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 2ம் கட்டமாக நேற்று தொடங்கிய உடற்தாங்கும் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை இந்த தேர்வு தொடங்கியது. இதில் கயிறு ஏறுதல், 100மீ, 400மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டது. நேற்று 800 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 700 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெறுவர்களுக்கு அடுத்தக்கட்டமாக நேர்காணல் தேர்வு நடத்தப்படும்’ என்றனர்.


வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த உடற்தாங்கும் தேர்வில் கயிறு ஏறும் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்.
அடுத்த படம்: வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த உடற்தாங்கும் தேர்வை பார்வையிட்ட ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி (பொறுப்பு) விஜயகுமார்.

Tags : Vellore ,Level Guard ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...