×

வேலூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர 30ம் தேதி கடைசி நாள்

வேலூர், நவ.22: வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பா, தாளடி, பிசான என 3 பருவம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் நெற்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதற்காக பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 601 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ₹428 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது, முன்மொழிவு பதிவு விண்ணப்பம், சிட்டா அடங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore district ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு