×

ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் ரயில்வே மண்டல மேலாளர் ஆய்வு

ஜோலார்பேட்டை, நவ.22: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தெற்கு மண்டல ரயில்வே மேலாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையிலிருந்து வரும் ஜனவரி 10ம் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளர் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தெற்கு மண்டல ரயில்வே மேலாளர் பி.மகேஷ், சீனியர் கமர்சியல் மேலாளர் விஜயமாலா மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து நேற்று ஜோலார்பேட்டைக்கு வந்தனர்.அங்கு ரயில் நிலைய பிளாட்பாரங்கள், அலுவலக அறைகள், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே ஊழியர் ஓய்வறைகள், பழைய கட்டிடங்கள் உட்பட பல இடங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர், மண்டல ரயில்வே மேலாளர் மகேஷ் கூறுகையில், `ரயில் நிலைய பிளாட்பாரத்தை விரிவுபடுத்தவும், ரயில் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரி சுந்தரமூர்த்தி, ரயில்வே மண்டல பாதுகாப்பு ஆணையர் ராம்பிரசாத், இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து, அங்கிருந்து வேறொரு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி, ஆம்பூர் ரயில் நிலையங்களை ஆய்வு செய்த மண்டல ரயில்வே மேலாளர் மகேஷ் தலைமையிலான குழுவினர் பின்னர் காட்பாடிக்கு வந்தனர்.

இங்கு புதிதாக அமைக்கப்பட்ட எக்ஸலேட்டர், லிப்ட் செயல்பாடுகளையும், 2வது பிளாட்பாரத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்துமிடம், பிளாட்பாரங்கள் விரிவாக்கம் என பல இடங்களை ஆய்வு செய்ததுடன், பயணிகளுக்கு மேலும் செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இங்கு தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Railway Zone Manager Inspection ,Jolarpettai ,Katpadi ,Arakkonam Railway Stations ,
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...