×

புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை பெரணமல்லூர் அரசு பள்ளியின் அவல நிலை

பெரணமல்லூர், நவ.22: பெரணமல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரும்பாலான வகுப்பறைகளின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வரும் மாணவிகள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெரணமல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

இந்நிலையில், பெரணமல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளது. ஆசிரியைகள் ஓய்வறை, பதிவேடுகள் அறை, 10ம் வகுப்பு அறைகள் என பெரும்பாலான அறைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளது. மேலும், தண்ணீர் சொட்டி சுவர்கள் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதனால் மாணவிகள் வகுப்பறைகளில் அச்சத்துடனேயே அமர்ந்து படித்து வருகின்றனர்.
பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே அரசு பள்ளியில் வகுப்பறைகள் ஓட்டை உடைசலுடன், தண்ணீர் சொட்டி வருகிறது. எனவே, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரணமல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சேதமடைந்து சுவர்களில் ஈரம் பரவி காணப்படுகிறது.

Tags : building ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி