கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் கேக் மிக்சிங் விழா

தூத்துக்குடி, நவ.22: தூத்துக்குடி ஹோட்டல் டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும் டிச.25ம்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி ஹோட்டல் டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. இந்த கேக் மிக்ஸிங் விழாவில் டிஎஸ்எப் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி.துரைராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணராஜபுரம் சேகர குருவானவர் ஜேஸ்பர் அற்புதராஜ் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் மற்றும் ஜிம்கானா கிளப் தலைவருமான ஜோபிரகாஷ், ஜிம்கானா கிளப் செயலாளர் அருள்ராஜ் சாலமன், டி.எஸ்.எப். செயல் இயக்குநர்கள் டி.கிப்சன், திவ்யா, பொதுமேலாளர் சுப்பிரமணியன், மற்றும் மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரிபழங்கள், அத்திபழம், பாதாம் முந்திரி பருப்புகள், வால்நட், செர்ரி பழம் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் மற்றும் பலதரப்பட்ட ஜாம் வகைகளுடன் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்படுகிறது. பின்னர் பழக்கலவையானது மிகப்பெரிய காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து பாதுகாப்பாக மூடப்படுகிறது. இவ்வாறாக தயாராகும் கேக்குகள் வருகிற டிச.16ம்தேதி முதல் டிஎஸ்எப் கிராண்ட் பிளாசாவில் விற்பனைக்கு வருகிறது. கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ மற்றும் சிறிய ஸ்லைஸ் அளவிலும் கிடைக்கும் என டிஎஸ்எப் செயல் இயக்குநர் கிப்சன் தெரிவித்தார்.

Related Stories: