×

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்கள்

தூத்துக்குடி, நவ.22: தூத்துக்குடியில் மாவட்ட ஆவின் முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவின் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் சின்னத்துரை தலைமை வகித்து பேசியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியாக ஆவின் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வளர்ச்சி பெறுவதற்காக திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர், மக்களுக்கு தரமான ஆவின்பால் கிடைப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆவின் பால்பண்ணை அமைப்பதற்கான இடம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்டத்தில் 36 பாலகங்கள் செயல்படுகின்றன, 185 முகவர்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 35 ஆயிரம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. 22 ஆயிரம் லிட்டர் விற்கப்படுவதை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகவர்கள் ஒத்துழைக்கவேண்டும். முகவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கான விற்பனை கமிஷன் ரூ.1.40 டிச.1 முதல் ரூ.2 ஆக உயர்த்தி வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் திருக்கோயில் வளாகம், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா ஆகிய 3 இடங்களில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ைஹடெக் பார்லர்கள் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் பல இடங்களுக்கு முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆவின் மூலம் பல்வேறு இனிப்பு வகைகள் விற்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தூத்துக்குடி ஆவின் பெயரில் மக்ரூன் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றார். இதில் பொதுமேலாளர் திரியேகராஜ் தங்கையா, விற்பனை மேலாளர் சாந்தி, அலுவலர்கள் வெங்கடேஷ்வரி, வேளாங்கண்ணி, முத்துலட்சுமி, ஜெயபால், டாக்டர் சாந்தகுமார் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.

Tags : Aavin ,locations ,Hi-Tech ,Thoothukudi district ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...