தூத்துக்குடியில் 3ம் கட்டமாக 114 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, நவ. 22: தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் நேற்று 3ம் கட்டமாக ஒரே நாளில் 114 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து  முக்கியத்துவம் வாய்ந்த வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டுமென மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு புதன்கிழமை  தோறும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள்  ஆக்கிரமிப்பாளர்களை சந்தித்து தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிடவேண்டும்  என்று அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்  அவ்வாறு அறிவுறுத்தப்பட்ட பகுதிகளுக்கு அடுத்த புதன்கிழமை அதிகாரிகள்  சென்று எஞ்சிய ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதன்படி நேற்று சிதம்பரநகர் பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை ராமச்சந்திரன், காந்திமதி ஆகியோர் தலைமையில்   மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன், ஜேசிபி மூலம் அகற்றினர். மேலும் விவிடி சிக்னல் முதல் சிதம்பரநகர் பகுதிகளில் கடைகளின் பெயர் பலகைகள், ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. நேற்று  காலை முதல் மாலை வரையில் முக்கிய பகுதிகளில் 114 ஆக்கிரமிப்புகள் ஒரே  நாளில் அகற்றப்பட்டுள்ளன. இதுவரையில் 362 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன  என்றும், புதன்கிழமை தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடரும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: