நூல் வெளியீட்டு விழா கிராமங்களில் வாசிப்பு திறனை அதிகரிக்க புத்தகங்கள் வெளியிடுவது அவசியம்

நெல்லை, நவ.22: வள்ளியூர் அருகேயுள்ள காக்கரையில் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. பேராசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வடக்கன்குளம் புலவர் சேசய்யா, பத்மநேரி முத்தையா, டாக்டர் வே.சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். முனைவர் நடராஜன் வரவேற்றார். எழுத்தாளர் பொன்னீலன் நூல்களை வெளியிட்டார்.

பொன்னீலன் எழுதிய என்னைச் செதுக்கியவர்கள் நூலை செந்தி நடராஜனும், முத்தாலங்குறிச்சி காமராசுவின் தென்னாட்டு ஜமீன்கள் நூலை எழுத்தாளர் சரலூர் ஜெகனும், பேராசியரியர் அ.கா.பெருமாளின் கவிமணி கட்டுரைகள் நூலை பேராசியர் கலையரசும், சோமசுந்தரத்தின் குறள் அமுதம் நூலை நல்லாசிரியர் டி.எஸ்.விநாயகமும் நா.நாகராஜனின் கால்படாத தேசம் நாவலை தூத்துக்குடி முருகேசனும், புதிய மாதவியின் ரசூலின் மனைவியாகிய நான் சிறுகதை தொகுதியை ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு ஆசிரியர் ரேவதியும், முனைவர் சுகந்தி அன்னத்தாயின் நாட்டுப்புறச் சிறார் வழக்காறுகள் நூலை முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ந.தர்மராஜும் பேராசிரியர் சு.சண்முகசுந்தரத்தின் நெல்லை மறவர் கதைப்பாடல்கள் நூலை ஆசிரியர் ஐயப்பனும்  பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் பொன்னீலன் பேசும்போது, கிராமத்தில் வாசிப்புத்திறன் மிகவும் குறைந்துவிட்டது. அதனை அதிகரிக்க கிராமங்களில் புத்தக வெளியீட்டு விழா நடத்த வேண்டும். தற்போது வள்ளியூர் அருகே காக்கரை என்னும் குக்கிராமத்தில் நூல்வெளியீட்டு விழா நடப்பது மனதுக்கு சந்தோஷத்தினை தருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நூல் வெளியீட்டு விழா நடத்த வேண்டும். இதனால் கிராம மக்களிடமும் வாசிப்புத்திறன் அதிகரிப்பதோடு கிராமங்களை நோக்கி எழுத்தாளர்கள் வரும்போது அவர்களின் எழுத்து புதுதேடலை தேடிச்செல்லும் என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர் ஹரிஹரன், கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். முனைவர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories: