மேட்டூரில் நிழல், அசல் கலைஞர்கள் ஆலோசனை கூட்டம்

மேட்டூர், நவ.22: கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலைஞர்களை பாதிக்கும் ஆபாச நடனங்களை தடை செய்ய, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நிழல், அசல் கலைஞர்கள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிஜங்களின் நிழல், அசல் கலைஞர்கள் நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா, நேற்று மேட்டூரில் நடைபெற்றது. விழாவிற்கு நாகாஸ் கலைக்குழுவின் நிறுவனர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் நிறுவனத்தலைவர் கலைபாஸ்கர், மாநில செயலாளர் குமேரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் தணிகாசலம் ஆகியோர் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினர்.  திரைப்பட நடிகர்கள் பெஞ்சமின், சதீஷ், நாடக நடிகர்கள் கங்காதரன், தண்டபாணி, சுப்ரமணியன் இயக்குனர்  சக்திபாலா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் கலைஞர்களை பாதிக்கும் வகையில், கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆபாச நடனங்களில் பங்கேற்பதில்லை, ஆபாச நடனங்களை கட்டுப்படுத்த காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசால் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரசாரங்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிஜங்களின் நிழல், அசல் கலைஞர்கள் நலசங்கத்திற்கு வழங்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது. மாநில இணை செயலாளர் அக்பர் நன்றி கூறினார்.

Related Stories: