சேலத்தில் நாளை மறுநாள் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கு எழுத்து தேர்வு

சேலம், நவ.22:  சேலத்தில் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை 412 பேர் எழுதுகின்றனர்.  டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு, வரும் 24ம் தேதி நடக்கிறது. இத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்தார். கலெக்டர் ராமன் முன்னிலை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவி போட்டித் தேர்வு வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கவுள்ளது. சக்தி கைலாஷ்மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில், 412 தேர்வர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வினை முழுமையாக கண்காணித்து பதிவு செய்ய ஒரு அறைக்கு 2 சிசிடிவி கேமராக்கள் வீதம், 4 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இம்மையத்தை 2 வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தேர்வு நுழைவுச் சீட்டினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து, எடுத்து வரவேண்டும். புகைப்படம் இல்லாத பட்சத்தில், தங்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலில்,  அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு  காலை 9 மணிக்குள் வரவேண்டும். தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் பொருட்களும் பயன்படுத்த அனுமதி கிடையாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முனுசாமி, மாவட்டவருவாய் அலுவலர் திவாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: