நோய் தாக்குதலால் சன்னமல்லி விளைச்சல் பாதிப்பு

சேலம், நவ.22:சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கன்னங்குறிச்சி பகுதியில் சன்னமல்லி பூவில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி போன்ற பகுதிகளில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சன்னமல்லி பூக்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சன்னமல்லிக்கு குறைந்த அளவு தண்ணீர் போதும். ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நிலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னங்குறிச்சியில் சுமார் 40 ஏக்கருக்கு மேல், சன்னமல்லி பூ பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 10 கிலோ முதல் 12 கிலோ வரை பூ கிடைக்கும். தற்போது நோய் தாக்குதலால் 2 கிலோ மட்டுமே கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன், வஉசி பூ மார்க்கெட்டில் சன்னமல்லி பூ கிலோ ₹150 முதல் ₹180 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால், கிலோ ₹400 முதல் ₹450 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: