×

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் உடல் கருகிய தொழிலதிபர் மனைவியும் சாவு

கிருஷ்ணகிரி, நவ.22: ஓசூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் டிரைவர் கொலையான சம்பவத்தை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரின் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி -ஓசூர் சாலையில் சானமாவு என்னுமிடத்தில் கடந்த 11ம் தேதி இரவு லாரியும், காரும் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், கார் டிரைவர் முரளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். ஓசூர் தொழிலதிபர் ஆனந்த்பாபுவின் மனைவி நீலிமா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், கூலிப்படையினர் கார் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டுகளை வீசி டிரைவரை கொலை செய்ததும், தொழிலதிபர் மனைவியை கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொழில் போட்டி காரணமாக தொழிலதிபர் ஆனந்த்பாபு, அவரது மனைவி ஆகியோரை இவ்வாறு கொலை செய்ய முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்த்பாபுவின் அக்கா கணவரான ஓசூர் தொழிலதிபர் ராமமூர்த்தி, மதுரையைச் சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன் மற்றும் மதுரை கூலிப்படைக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் முதலில் மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவரான மகராஜன்(40) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கூலிப்படையினருக்கு அனைத்து வகையிலும், குறிப்பாக அவர்கள் தங்குவதற்கான இடம், ஆனந்தபாபு, அவரது மனைவி நீலிமா எப்போது எங்கு சென்று வருகிறார்கள் என்பதை கண்காணித்து, கூலிபடையினருக்கு தெரிவிப்பது போன்ற சம்பவங்களில் உதவியதாக ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே உள்ள கங்காபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன்(35), தின்னூர் அருகே ஆலூரைச் சேர்ந்த சாந்தகுமார்(22) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், உடல் கருகிய நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நீலிமா தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை 6.45 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான தொழிலதிபர் ராமமூர்த்தி, மதுரை வக்கீல் வெங்கட்ராமன் உள்ளிட்ட 9 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உடல் கருகிய தொழிலதிபரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bodybuilder ,
× RELATED நேற்று சிகரெட்; இன்று சரக்கு: சிக்கிய பாடி பில்டர்