×

குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி உடனே மூட வலியுறுத்தல்

சிவகாசி, நவ.22:  சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் கிடப்பதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர்.
   சிவகாசி நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளது.
சிவகாசி நகராட்சி பகுதி வார்டுகளுக்கு குடிநீர் எடுத்து செல்ல நகர் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் நகர்  பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் சிவகாசி-விருதுநகர் பழைய சாலையில் மாரியம்மன் கோவில் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் குழிகள் தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  ஜேசிபி இயந்திரம்  மூலம் குழி  தோண்டிய போது  தனியார் செல்போன் நிறுவன கேபிள் வயரை துண்டித்து விட்டனர். இதனால் குழாய் பதிக்கும் பணிகள் பாதியிலேயே நின்று போனது. செல்போன் கேபிள் வயரை சரிசெய்ய தனியார் ச நிறுவனத்தினர் காலதாமதப்படுத்தி  வருகின்றனர். இதனால் தோண்டப்பட்ட குழிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மூடப்படாமல் அப்படியே  கிடக்கிறது. இந்த பகுதி சாலை மிகவும் குறுகலாக இருக்கும். இப்பகுதியில் 4 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளிகளில் கல்விபயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள்  தினமும் இந்த குழியை தாண்டி பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிநேரங்களில் மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
 நகராட்சி குடிநீர் வரும் நேரங்களில் பள்ளம் முழுவதும் நீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது. இது போன்ற நேரத்தில் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது. எனவே  குழாய் பதிக்கும் பணியை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,pit ,
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா