காரைக்குடி, நவ.22: தேவகோட்டை தே பிரிட்டோ பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசுதின குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதில் வருவாய் மாவட்ட அளவில் நடந்த ஹாக்கி போட்டியில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய குறுவட்டத்தை சேர்ந்த பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதி போட்டியில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி ஹாக்கி அணி சிவகங்கை புனித ஜோசப் பள்ளி அணியை பெனாலிட்டி ஸ்டோக் முறையில் 5க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மதுரையில் வரும் ஜனவரியில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாட அழகப்பா மெட்ரிக் பள்ளி அணி தேர்வு பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற அணியை பள்ளி தலைவர் வைரவன், செயலாளர் உமையாள்ராமநாதன், அழகப்பா மாடல் ஹாக்கி கிளப் செயலாளர் முத்துக்கண்ணன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மாதவன், ஹரிபிரசாத் மற்றும் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழக நிர்வாகிகள் பாராட்டினர்.