×

கலெக்டர் அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் அச்சுறுத்தும் மேற்கூரை

சிவகங்கை, நவ. 22: சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கான்கிரீட் மேற்கூறைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து அச்சுறுத்தி வருகின்றன.
சிவகங்கை கடந்த 1985ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு 30ஆண்டுகள் ஆகிவிட்டதால் கடுமையான சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றன. இதில் அவ்வப்போது சில பகுதிகள் மட்டும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள், கழிப்பறை கதவுகள் அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கு எதிரே கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளன. இதில் உள்ள கான்கிரீட் மேற்கூறைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வாகனம் நிறுத்த வருபவர்களை அச்சுறுத்தி வருகின்றன. நிறுத்தி செல்லும் வாகனங்களும் சேதமடைகின்றன. மேற்கூறை உடைந்தால், உடைந்து விழுந்த பகுதியை மட்டும் அவ்வப்போது சீரமைத்து பெயிண்டிங் செய்து விடுகின்றனர்.
அலுவலர் ஒருவர் கூறியதாவது:கட்டிடங்கள் போதிய உறுதியில்லாமல் இருப்பதால் அவ்வப்போது கான்கிரீட் மேற்கூறைகள், சிலாப்புகள் உடைந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் வாகன நிறுத்துமிடங்கள் மிக மோசமாக உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டாமல் தொடர்ந்து டச் அப் வேலைகள் மட்டுமே செய்வதால் பயனில்லை. சேதமடைந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றார்.

Tags : collector ,office parking lot ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...