×

வேகாத பருப்பால் சாப்பிட முடியாமல் மாணவர்கள் அவதி

சிவகங்கை, நவ. 22: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான பருப்புகள் வேக வைக்க முடியாத நிலையில் உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, உப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. விறகு, காய்கறி, மசாலா பொருட்கள் வாங்குவதற்கு சமூக நலத்துறை சத்துணவு திட்டம் சார்பில் செலவினத் தொகை வழங்கப்பட்டு வரு
கிறது.
இந்நிலையில் சத்துணவிற்கு வழங்கப்படும் துவரம் பருப்பு சுமார் இரண்டு மணி நேரம் வேக வைத்தாலும் வேகவில்லை. வேகாத நிலையிலேயே அவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களும் உணவை சாப்பிட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சத்துணவு மையங்களில் இதுவரை கேஸ் அடுப்பு வழங்கப்படாமல் விறகு அடுப்பிலேயே சமைத்து வருகிறோம். விறகு அடுப்பில் பல மணி நேரம் பருப்பை மட்டுமே வேக வைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியிருந்தும் பருப்பு வேகவில்லை.
வேகாத பருப்பின் மூலம் செய்யப்படும் உணவை மாணவர்களுக்கு வழங்கி அதனால் மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதற்கும் சத்துணவு ஊழியர்கள் மீதே குற்றம் சுமத்துவர். எனவே மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேகாத துவரம் பருப்பை திரும்ப எடுத்துக்கொண்டு தரமான பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...