×

மழை காலங்களில் ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்கள் விஞ்ஞானிகள் ஆலோசனை

சாயல்குடி, நவ.22:  மழை காலங்களில் ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
செம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டு பண்ணும் நோய்களில் நீல நாக்கு நோய் முக்கியமாக கருதப்படுகிறது. இந்நோய் நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில் தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். மழை காலங்களில் கூலிகாய்ட்ஸ் என்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்நோய் தாக்குதல் அதிகமாக கணப்படுகிறது.
இந்நோய் ஒருவகை நச்சுயிரிகளால் செம்மறி ஆடுகளில் உருவாகிறது. வெள்ளாடுகளை இக்கிருமி தாக்கினாலும், நோயின் தீவிரம் செம்மறி ஆடுகளில் இருப்பது போன்று அதிகமாக இருக்காது. நோயின் அறிகுறிகள். நோயுற்ற ஆடுகள் உடல் வெப்பநிலை உயர்ந்து அவை நடுக்கத்துடன் காணப்படும். 105 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மூக்கின் வழியே தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். நாசித்துவாரங்கள் அடைந்து மூச்சுவிட சிரமப்படும்.  வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, நாசித்துவாரங்களின் உட்பகுதிகளில் புண்கள் காணப்படும். நாளடைவில் நாக்கில் வீக்கம் ஏற்பட்டு வாயின் வெளிப்பகுதியில் நீண்டு நீலநிறமாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் ரத்த கழிச்சலும் காணப்படும். இந்நோய் தாக்கினால் 70 சதவீதம் வரை இறப்பு நேர வாய்ப்புள்ளது. நோய் பரமரிப்பு. நோய்கண்ட ஆட்டினை தனியே பிரித்து நன்றாக பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு விடக்கூடாது. தீவனம் உண்ணமுடியாத நிலை இருப்பதால் அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் கஞ்சியினை நீர் ஆகாரம் போன்று தரவேண்டும். வாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சாதாரண உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவவேண்டும். புண்களுக்கு போரிக் ஆசிடி மருந்தினை வேப்பெண்ணெயில் கலந்து தடவவேண்டும். 100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரை கலக்கி வாயில் உள்ள புண்களுக்கு தடவ வேண்டும். ஊசிமூலம் நோய் பரவும் என்பதால், ஊசிகள் மூலம் மருந்து அளிக்ககூடாது. கால்நடை டாக்டர்களின் ஆலோசனைபடி சல்பா, டெட்ராசைக்ளின் போன்ற மருந்தினை 3 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

Tags : Scientists ,
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு