×

தொடர் விடுப்பில் தாசில்தார் அவசர சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதி

சாயல்குடி, நவ.22:  முதுகுளத்தூர் தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆகியோர் தொடர் விடுப்பில் சென்று விட்டதால் அவசர சான்றுகள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.
முதுகுளத்தூர் தாலுகாவில் கீழத்தூவல், தேரிருவேலி, காக்கூர், மேலக்கொடுமலூர், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு ஆகிய ஆறு வருவாய் பிர்ஹாகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கிய 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு தாசில்தாராக கல்யாணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பாலசரவணன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இதில் தாசில்தார் 21 நாள் விடுமுறையில் சென்று விட்டதாக கூறுப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உப்பிரிவு செய்யப்பட்ட பட்டா, தாழ்த்தப்பட்ட வகுப்பு சான்று, ஓபிசி சான்று, வாரிசு சான்று, ஆதரவற்ற விதவைக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை சான்று உள்ளிட்ட முக்கிய சான்றுகளை பெற முடியாமலும், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இல்லாமல் முதியோர் உதவித்தொகை, விதவை உதவிதொகை உள்ளிட்ட உதவித்தொகை சான்றுகளை பெற முடியாமலும் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் தற்போது விவசாய பணிகள் நடந்து வருவதால் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தேவைப்படும் மூவிதழ் சான்றுகளை விவசாயிகள் சம்மந்தப்பட்ட விஏஓ.களிடம் பெற்று வருகின்றனர். இதில் சில விவசாயிகள் கூட்டுபட்டா வைத்துள்ளனர். பட்டாவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்கவும், சிறு,குறு விவசாயி சான்றுகளை தாசில்தார் வழங்கவேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் பட்டா பிரச்னையில் தீர்வு காண முடியாமல் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் வங்கிகளில் பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.
மேலும் முதுகுளத்தூர் பகுதியில் 1958ல் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ள பகுதியாக கருதப்படுகிறது. இந்நிலையில் தாலுகா நடுவர்(நீதிபதி) எனப்படும் தாசில்தார் இல்லாததால், சட்ட ஒழுங்கு பிரச்னையிலும் கேள்வி குறி எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நிரந்தர தாசில்தார் நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை