×

பயன்படுத்த முடியாத போர்வெல்லில் மழைநீர் சேமிப்பு

சாயல்குடி, நவ. 22: முதுகுளத்தூர் பேரூராட்சியில் தூர்ந்துபோன ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி வருகின்றனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சிக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டது. தொடர் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், தண்ணீர் உப்புத்தன்மையுடனும் காணப்பட்டது. இதனால் தண்ணீர் விநியோகம் செய்யாமல் இருந்ததால் தூர்ந்து போய் கிடந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள், அடிகுழாய்கள் செயல்படாமல் முடங்கி கிடந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் வில்சன் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்து பலியானான். இதனையடுத்து பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து முதுகுளத்தூர் பேரூராட்சியில் பயன்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளில் ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் தொட்டி, குழாய் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமான அரசு மருத்துவமனை, அம்பேத்கர் நகர், திடல் தெரு ஆகியவற்றில் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள  ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேமிப்பு வசதி செய்யும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து செயல்அலுவலர் மாலதி கூறும்போது, முதுகுளத்தூர் பேரூராட்சியில் 10க்கும் மேற்பட்ட தூர்ந்து போய் கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவற்றின் அருகே மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் பழைய ஆழ்துளை கிணறுக்குள் விடப்படுகிறது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால் புதிதாக அமைக்கப்பட்ட 3 மழைநீர் சேமிப்பு ஆழ்துளை கிணறுக்குள் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் சேமிப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது.
இதுபோன்று சாயல்குடி பேரூராட்சியிலும் தூர்ந்து போய், பயன்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வசதி அமைக்கப்படும் என்றார்.

Tags : borewells ,
× RELATED தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில்...