துப்புரவு பணியாளர் மிரட்டுவதாக கூறி ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகை

திருமங்கலம், நவ.22:  துப்புரவு பணியாளர் மிரட்டுவதாக கூறி திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவ, மாணவியர்கள் நேற்று திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இதில் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெருபாலானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வெளியூரை சேர்ந்தவர்கள். இந்த கல்லூரியில் துப்புரவு பணியாளராக திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த மாயம்மாள்(42) பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நேரத்தில் வராமல் காலம்தாழ்த்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் கல்லூரி வகுப்பறைகளில் சுத்தம்செய்யாமல் செய்ததாக மாணவ, மாணவியர்களிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். இதனால் அதிருப்தியடைந்த இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் துப்புரவு பணிசெய்யாமல் கையெழுத்து போடமுடியாது என மறுத்துள்ளனர். இதனால் துப்புரவு பணியாளர் மாயம்மாள் மற்றும் மாணவ, மாணவியரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு சாதகமாக பேசிய மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் மற்றும் பெண் ஊழியர் ஆகியோர் மீது மாயம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் பிசிஆர் வழக்கில் புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவியர்கள் நேற்று தங்களது வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக கல்லூரியிலிருந்து கிளம்பி திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினால் போலீசார் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவ, மாணவியர்கள் துப்புரவுபணியாளர் மாயம்மாள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு கொடுத்தனர்.

இது குறித்து மாணவி காய்த்திரி கூறுகையில், ‘துப்புரவு பணிகள் சரிவரை செய்யாததால் எங்கள் கல்லூரி வளாகம் அசுத்தமாக உள்ளது. நோயாளிகளுக்கு இதனால் சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. தூய்மையாக இருக்கவேண்டிய மருத்துவமனை கல்லூரியை அசுத்தமாக இருப்பது வேதனையாக உள்ளது. இது குறித்து துப்புரவுபணியாளரிடம் கேட்டால் எங்களை அவதூறாக பேசுகிறார். நீங்கள் வெளியூரிலிருந்து படிக்கவந்துளீர்கள். நான் உள்ளூரை சேர்ந்தவர் என ஆட்களை வைத்து மிரட்டுகிறார். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் ஸ்டேசனை முற்றுகையிட்டோம்’ என்றார்.

ஓமியோபதி கல்லூரி முதல்வர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘துப்புரவு பணியாளர் மாயம்மாள் கடந்த 11 ஆண்டுகளாக இங்கு பணியில் உள்ளார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. 25 தடவை நாங்கள் மெமோ கொடுத்துள்ளோம். 2 முறை தற்காலிக பணிநீக்கமும் செய்துள்ளோம். விடுப்பு எடுத்தால் கூறுவதில்லை. கல்லூரிக்கு காலதாமதமாக வருகிறார். கேட்டால் மிரட்டுகிறார். தற்போது மாணவர்களின் போராட்டம் குறித்து சென்னையிலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: