×

குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, நவ. 22: குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை பரவை ஏஐபிஇஏ. நகர் குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் அழகர்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எங்கள் குடியிருப்பு பகுதியில் 400க்கும் அதிகமான பிளாட்டுகள் பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், பிளாட்டில் கழிவுநீர் தொட்டி, மழைநீர் தொட்டி போன்றவற்றுக்கு இடவசதி செய்யாமல் வீடுகள் கட்டியுள்ளனர். பின்னர் வீட்டின் முன்புள்ள தெருப்பகுதியில் மழைநீர், கழிவுநீர் தொட்டியை அமைத்துள்ளனர். இதனால் தெருக்கள் குறுகி, போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. வீடு கட்டும்போது விதிகளை பின்பற்றி கட்டப்படுவதே இல்லை. காண்டிராக்ட் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்துக்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பேரூராட்சி கட்டிட அனுமதியை மீறி, எங்கள் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் குடியிருப்பு பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை டிச.10க்கு தள்ளிவைத்தனர்.

Tags : Icort Branch ,Inspector General ,Buildings ,area ,
× RELATED அரசு நிகழ்ச்சியில் பாஜவிடம் அதிமுக...