கொடைக்கானலில் மின்னல் தாக்கி 2 டிரான்ஸ்பார்மர் சேதம் 10 வீடுகளில் மின்சாதன பொருட்கள் நாசம்

கொடைக்கானல், நவ. 22: கொடைக்கானலில் மின்னல் தாக்கி 2 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக 10 வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின.

கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த நேரத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின. இதையடுத்து உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்தது. கொடைக்கானல் காந்திபுரம் பகுதியிலும் அண்ணாநகர் பகுதிகளிலும் இந்த மின் விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அண்ணாநகர் பகுதியில் உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்ததில் இந்தப் பகுதியில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு பல்கீஸ் பேகம், கிருஷ்ணன் ,தாமஸ் பழனியம்மாள், ராணி ஆகியோர் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. திடீரென்று வீட்டிற்குள் தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காந்திபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் இந்தப் பகுதியை ஒட்டியுள்ள தந்திமேடு, அந்தோணியார் கோவில் தெரு, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

அண்ணாநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அவர்களிடமிருந்து புகார் மனுக்களையும் பெற்றனர்.

இதுகுறித்து பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாருக்கு நேரடியாக புகார் தெரிவித்தனர். ஐபி செந்தில்குமாரும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து இந்த பகுதியில் மின்வாரியத்தினர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டதுடன், கருகிய மின்மீட்டர் பாக்ஸ்களை உடனடியாக மாற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: