×

வத்தலக்குண்டு அருகே 100 ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது

வத்தலக்குண்டு, நவ. 22: வத்தலக்குண்டு அருகே கண்மாய் மடையின் கீழ் பகுதியில் வெளியேறிய தண்ணீர் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ளது மீனாங்கன்னிபட்டி. இங்குள்ளது மல்லிநாயக்கர் கண்மாய். இந்த கண்மாய் 1000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கு கால்வாய்கள் எதுமில்லை. மழை பெய்தால் மட்டுமே கண்மாய் நிரம்பும். ஒருமுறை நிரம்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பகுதி விவசாயிகளுக்கு கை கொடுக்கும்.

ஆனால் இந்த கண்மாய் கடந்த 15 ஆண்டுகளாக நிரம்பவில்லை. நேற்று ஒரு நாள் பெய்த மழையில் காலியாக இருந்த கண்மாய் பாதியளவு தண்ணீர் ஏறியது. அதிகாலையில் கண்மாயிலிருந்து 3 அடி தண்ணீர் மடையின் கீழ் பகுதியில் பெருங்கசிவாக வெளியேறியது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள மணி, இளங்கோவன் உள்பட பல விவசாயிகள் செய்திருந்த வாழை, நெல், சம்பங்கி பூ, மல்லிகை பூ போன்ற விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்த வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், வேதா, ஊராட்சி செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கண்மாய் பகுதிக்கு விரைந்து சென்று கண்மாய் கசியும் பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி தடுத்தனர். இதைத்தொடர்ந்து கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவது முற்றிலும் நின்றது. அதிகாரிகளின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

அதிகாரிகளிடம் விவசாயி இளங்கோவன் கூறுகையில், ‘கண்மாயில் கால்வாசி பகுதியில் சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மணி கூறுகையில், ‘தண்ணீர் புகுந்த நிலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு நிற்கிறது. வெயிலடித்து காய்ந்து விட்டால் பயிர்கள் தப்பிவிடும். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது. அவ்வாறு பயிர்கள் சேதமடைந்தால் அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : farmland ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் இரு முதியவர்கள் சடலம் பூட்டிய வீட்டிற்குள் மீட்பு