இந்த நாள் நிலக்கோட்டை அருகே பாசன கால்வாயில் ஒதுங்கிய இளம்பெண் உடல்

வத்தலக்குண்டு, நவ. 22: நிலக்கோட்டை அருகே பாசன கால்வாயில் அடையாளம் தெரியாத இளம்பெண் பிணம் ஒதுங்கியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டி, குன்னுவாரன்கோட்டை, நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி, விளாம்பட்டி வழியாக மதுரை நோக்கி தண்ணீர் செல்கிறது. நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியையொட்டி செல்லும் கால்வாயில் இளம்பெண் ஒருவர் உடல் மணல் திட்டில் சிக்கி ஒதுங்கியுள்ளது.

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை விளாம்பட்டி போலீசார் கைப்பற்றி நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் எஸ்ஐகள் இசக்கி மற்றும் தயாநிதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர் யார், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த பாசன கால்வாயில் அடித்து வரப்படும் ஆடு, மாடு, நாய், பன்றி பிளாஸ்டிக் குப்பைகள், விவசாய கழிவுகள் மற்றும் இறந்த உடல்கள் தண்ணீரில் அடித்து வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் மட்டப்பாறை அருகே உள்ள பன்னிரண்டாம் பாலம் அருகே குப்பை போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை அந்தந்த பகுதி பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வைகைமுத்து கூறுகையில், ‘தற்போது கால்வாயில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் குளிப்பவர்கள் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும். சிறுவர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும் பொதுவாக அந்தந்த ஊர் பெரியவர்கள் கால்வாய் பகுதியை கண்காணிக்க இளைஞர்களை நியமிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: