×

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் மூலம் 15 பதவி குறைய வாய்ப்பு

திருவள்ளூர், நவ. 22: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய 4 நகராட்சிகளில் 87 வார்டுகள், 10 பேரூராட்சிகளில் 165 வார்டுகள் உள்ளன.கடந்த, 2016ல் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை, மறைமுகமாக தேர்ந்தெடுக்க அரசாணை வெளியிடப்பட்டது. தேர்தல் ரத்தான சில மாதங்களுக்கு பின், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசாணை மாற்றி வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளை சமாளிக்கவும், கூட்டுறவு தேர்தல் பாணியிலேயே உள்ளாட்சி தேர்தலில் பதவிகளை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் மறைமுகமாக தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு மேயர், 4 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி தலைவர்கள் என, 15 பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியிருக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களில் ஒருவரை மறைமுக வாக்கெடுப்பு மூலமாக இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

இதுகுறித்து உள்ளாட்சி தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தால், தேர்தல் மூலம் நிரப்பப்படும் பதவிகள் எண்ணிக்கையில் 15 குறையும்.ஒட்டுமொத்த உள்ளாட்சிகளில், 526 ஊராட்சி தலைவர்கள் மட்டும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் மூலம் நிரப்பப்படும் பதவிகள் எண்ணிக்கை 5,025ல் இருந்து 5,010 ஆக குறையும்’’ என்றனர்.


Tags : Mayor ,leaders ,election ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!