×

அம்பத்தூர் மண்டலம் கொரட்டூர் பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலைகள்

அம்பத்தூர், நவ. 22: அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 84வது வார்டு கொரட்டூரில்  விநாயகர் கோயில் தெரு, பேச்சியம்மன் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு ஆகிய தெருக்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.     இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கொரட்டூர் பகுதியிலுள்ள தெருக்களில் சாலைகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பிறகு, மேற்கண்ட  சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் பாதசாரிகள் நடமாட முடியவில்லை.

குறிப்பாக சிறு மழை பெய்தாலும் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் முதியோர், பெண்கள், சிறுவர்கள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.     இதோடு மட்டுமல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளிக்கும், டியூசனுக்கும் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் மாணவர்களும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். அவசர தேவைக்கு நோயாளிகளை ஏற்றி செல்ல ஆட்டோக்களும் வர மறுக்கின்றன. அப்படியே வர வேண்டுமென்றால், குண்டும் குழியுமான சாலைகள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் மிகவும் சிரமப்பட்டே வரவேண்டிய அவல நிலை உள்ளது.

    மேலும், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும்  சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இனி மேலாவது கொரட்டூர் பகுதியில் உள்ள மேற்கண்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Korattur ,roads ,Ambattur ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மழை பெய்தால் குளமாகும் சாலை வாகன ஓட்டிகள் அவதி