திருப்போரூர் - திருப்பதி - வேலூர் இடையே அரசு பஸ் சேவையை மீண்டும் தொடர வேண்டும்

திருப்போரூர், நவ. 22: திருப்போரூர் - திருப்பதி - வேலூர் இடையே நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை, மீண்டும் தொடர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருப்போரூரில் இருந்து திருப்பதி, வேலூர் ஆகிய இடங்களுக்கு புதிதாக அரசு பஸ் போக்குவரத்து சேவை கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருப்பதிக்கு (தஎ212 எச்) திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு (தஎ157 Extn) ஆகிய 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும், திருப்போரூரில் இருந்து நெம்மேலி, ஒரத்தூர், தண்டரை வழியாக செங்கல்பட்டு (தஎ115), திருப்போரூரில் இருந்து வெள்ளப்பந்தல், கொல்லமேடு, காட்டூர் வழியாக கிளாப்பாக்கம் (தஎ டி.27ஏ) ஆகிய பஸ் சேவைகளும் தொடங்கப்பட்டன.திருப்போரூரில் இருந்து வேலூருக்கு கட்டணமாக ₹80, திருப்பதிக்கு கட்டணமாக ₹130 என நிர்ணயிக்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் வரை இயக்கப்பட்ட இந்த அரசு பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா ஆகியவற்றுக்கு அனுப்பப்படுவதாக கூறி நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ்கள் நிரந்தரமாக தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன.

இதனால் காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு சென்றவர்கள், தற்போது காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து, மற்றொரு பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீண் அலைச்சலும் கூடுதல் பண விரயமும் ஏற்படுகிறது.எனவே, திருப்போரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கும், திருப்பதிக்கும் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : government ,Tiruppore ,Tirupati-Vellore ,
× RELATED 9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக...