×

சமமாக மாவட்டம் பிரிப்பதில் குளறுபடி அதிமுக அரசு அண்ணாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது

காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் மாவட்டத்தை சமமாக பிரிப்பதில் குளறுபடி ஏற்படுத்திய அதிமுக அரசு அண்ணாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது என காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், மாவட்ட பிரிப்பு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு, கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகராக கல்வியில் சிறந்து விளங்குகிறது. இன்றளவும், பாரம்பரிய கோயில்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாகவும் உள்ளது.மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல அரசர்கள் காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்தனர். அருகில் மாமல்லபுரம் துறைமுகம் இருந்ததால் அண்டை நாடுகளுக்கு பயணம் செய்யும் வசதிகளுக்காக காஞ்சிபுரத்தை தலைநகராக பயன்படுத்தினர்.

சீனப் பயணி யுவான் சுவாங், காஞ்சிபுரத்தை பார்வையிட்டு, காஞ்சிபுரம் மக்களின் மேம்பட்ட கலாசாரம் உள்ளிட்டவை குறித்து வியந்து பாராட்டி பதிவு செய்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் ஆயிரம் கோயில்களின் நகரம் என்றும் தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இரண்டு மாவட்டமாக பிரித்தபின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தில், உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் என 3 தாலுகாக்களும்,   பெரும்புதூர் கோட்டத்தில், குன்றத்தூர், பெரும்புதூர் என 2 தாலுகாக்கள் என மொத்தம் 5 தாலுகாக்கள் செயல்படும்.

மாவட்ட பிரிவினையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள், 5 தாலுகாக்கள் மட்டுமே உள்ளன. மேலும் கடற்கரை பகுதி, தொழில்வளம், நெடுஞ்சாலை, சுற்றுலா மையம், வண்டலூர் உயிரியல் பூங்கா என அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் பலம் குறைந்த மாவட்டமாக மாறிவிடும். பன்னாட்டு விமான நிலையம், கடற்கரை பகுதி இல்லாத மாவட்டமாகவும் காஞ்சிபுரம் மாறிவிடும்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தை காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம் என 2 வருவாய் கோட்டங்களாக பிரித்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தில்  பெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய  தாலுகாக்களையும், தாம்பரம் வருவாய் கோட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களை இணைத்து மாவட்டத்தை பிரிக்கலாம். இதன்மூலம் மாவட்டம் சமமாக பிரிக்கப்படும் நிலை உருவாகும்.அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பெருநகராட்சி, தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் வரும். இதன்மூலம் மாவட்டம் சமமாக பிரிக்கப்படும். இந்த திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : AIADMK ,government ,district ,Anna ,
× RELATED அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.: ஐவர் குழு ஆலோசனை