×

தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காக தனியாக வரி விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

தாராபுரம்.நவ.22: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  வரி செலுத்துவோர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் தலைவர்  வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கௌரவத் தலைவர் தமிழரசன்,  செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் ராமசாமி மற்றும் வரி செலுத்துவோர் சங்க  உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு; கடந்த 1.4.2018க்கு பின் தமிழ்நாடு அரசு  மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொத்து வரியை வணிக வளாகங்களுக்கு 100  சதவீதமும், குடியிருப்பு வீடுகளுக்கு 50 சதவீதமும் உயர்த்தி உத்தரவிட்டது.

மேற்கண்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாராபுரம் நகர வரி செலுத்துவோர்  சங்கம் சார்பிலும் பொது நல அமைப்புகளும் அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை  வைத்தது 1.4.18க்கு முன்னர் செலுத்திய சொத்துவரி செலுத்தலாம் என்றும்  ,வரி குறைப்பு பற்றி ஆராய உயர்மட்ட குழுவை அமைத்து உத்தரவை பிறப்பித்த  தமிழக அரசுக்கு  நன்றியை தெரிவிப்பது.தாராபுரம் நகராட்சி  சொத்துவரி ரசீதுடன் திடக்கழிவு மேலாண்மை வரி என ஒவ்வொரு வரிவிதிப்பு  எண்ணுக்கும் தொகை வசூலிக்கப்படுகிறது சொத்து வரி செலுத்துவதே நகரத்தில்  அனைத்து மேலாண்மை பணிகளுக்கும் சேர்த்துதான் செலுத்தப்படுகிறது எனவே தனியாக  திடக்கழிவு மேலாண்மை வரி என பிரித்து காட் போடுவதை தாராபுரம் நகராட்சி  கைவிட வேண்டும்.தமிழக அரசு  தற்போது அறிவித்துள்ள வரி குறைப்பு பற்றிய தகவலை அனைவரும் தெரிந்து  கொள்ளும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் பகிரங்கமாக விளம்பரப் பலகை வைக்க  வேண்டும்.

தாராபுரம் நகராட்சி குப்பைகளை சேகரிப்பதற்காக தெருக்கள்  தோறும் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளை சமீபகாலமாக நகராட்சி  நிர்வாகமே எடுத்து அப்புறப்படுத்தி விட்டது. இதன் காரணமாக தினமும் சேரும்  குப்பைகளை ஆங்காங்கே பொது இடங்களிலும் வீதிகளில் சந்திப்புகளிலும்  குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து நகராட்சி லாரிகள்  மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு  தொற்றுநோய் பரவி வருவதுடன் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகரின் சுகாதாரத்தை பொதுமக்களின் நலனை  பாதுகாக்க மீண்டும் குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே வைத்து தினசரி நகராட்சி  நிர்வாகம் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1.4.2018 க்குப்பின் மறுசீராய்வு என்ற பெயரில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை  நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : municipality ,Tarapuram ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை