×

குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை

திருப்பூர், நவ.22: பொது மக்களின் அவசிய தேவையான குடிநீர் திட்டப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு, நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.அம்ரூத், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்–்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 4வது திட்ட குடிநீர்  குழாய்களை பதிக்கும் போது, மரங்கள் அகற்றப்பட்டால் அதற்கு பதில் வேறு ஒரு மரம் நட வேண்டும்.

பொது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கழிவு நீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் விதமாக பாதாள சாக்கடை திட்டப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முடிவுற்றவுடன் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சாலைகளை மேம்படுத்திட வேண்டும். பொதுமக்களின் அவசிய தேவையான குடிநீர் திட்டப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன துணைத் தலைவர் ராஜேந்திரன், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் திருமுருகன், நான்கு மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : drinking water projects ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட 70...