×

தொழிலாளர்கள் போர்வையில் வடமாநில வழிப்பறி கும்பல் துப்பாக்கியுடன் ஊடுருவல்

திருப்பூர், நவ.22: திருப்பூர் மாநகர் பகுதிகளில் வடமாநில வழிப்பறி கும்பல் தொழிலாளர்கள் எனும் போர்வையில் துப்பாக்கியுடன் ஊடுருவியுள்ளதால் தொழில்துறையினர், குடியிருப்பின் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இதில், 2 லட்சத்துக்கு  மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தொழிலாளர்களின் பின்புலம் அறியாமல் வேலைக்கு ஆட்கள் கிடைத்தால்போதும் என்ற நிலையில் வேலைக்கு அமர்த்துகின்றனர். 100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளை அறைகளாக மாற்றி வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இடத்தின் உரிமையாளர்கள் வாடகைக்கு ஆசைப்பட்டு வடமாநில தொழிலாளர்களின் பின்புலம் அறியாமல் தங்க வைக்கின்றனர். இவர்களின் வருகையால் பல்வேறு போதை பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ஒரு கும்பல், நாட்டுத்துப்பாக்கியைக் காட்டி, பொதுமக்களிடம், வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக, பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா அன்சாரி(26), சந்தன்குமார்(33) உட்பட 6 பேரை அவிநாசி போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில், முஸ்தபா அன்சாரி, கொள்ளையில் ஈடுபடும் நோக்கில், பீகார் மாநிலம், முசாபுர் பகுதியில் இருந்து, ஆசிக் என்பவரிடம் இருந்து, இரு நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரியவந்தது. ஏற்கனவே ஒரு வழக்கில் பீகார் முசாபுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிக்கை, அவிநாசி போலீசார் பீகார் சென்று அழைத்து வந்து கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், ஆசிக் மீது முசாபுர் பகுதியில் 10 கொலை மற்றும் 9 கொள்ளை வழக்குகள் உள்ளன. ஏராளமானோருக்கு நாட்டுத்துப்பாக்கி சப்ளை செய்துள்ளார். பல அடியாட்களுடன், ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர்களுடன், அவிநாசியில் தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினர்.

வடமாநில வழிப்பறி கும்பல் வருகை காரணமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளை முயற்சி, ஓடும் ரயிலில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் கைக்குழந்தையுடன் சென்ற வடமாநில பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.  தாராபுரம் பொன்னாபுரத்தை சேர்ந்த கணவனை பிரிந்து தனியாக வசித்த பெண்ணுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்திய வடமாநில கூலித்தொழிலாளி  பெண்ணை கொலை செய்த பின் தலைமறைவானான்.
டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், வாடகைக்கு வைத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் பீதி அடைந்துள்ளனர். ஒரு சில குடியிருப்பின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்க மறுத்து வருகின்றனர்.

Tags : Northern Territory ,
× RELATED திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்.பி பிரசாரம்