×

இளம் வயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

ஊட்டி, நவ. 22: மாணவர்கள் தங்களின் இளம் வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என நூலக வார நிறைவு விழாவில் கலெக்டர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் 52வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கிய போட்டிகள், பட்டிமன்றம், புத்தக கண்காட்சி, கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நூலக வார விழாவின் நிறைவு விழா நேற்று ஊட்டியில் உள்ள மலைப்பகுதி எச்ஏடிபி பயிற்சி அரங்கில் நடந்தது.   மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் இளம் வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நூலகங்களுக்கு சென்று அறிவை வளர்க்கும் பல புத்தகங்களை தேடி தேடி படிக்க வேண்டும். செல்போன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார்.அரசு வக்கீல் பாலநந்தகுமார் பேசுகையில், தமிழ்மொழி தான் உலகத்தில் தோன்றிய முதல் மொழி என்பது கீழடி அகழ்வாராய்ச்சியில் தெரியவருகிறது, என்றார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேட போட்டிகள், இசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட நூலகர் ரவி, வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் ஜனார்த்தனன், நூலகர்கள் சிவாஜி, ராஜசேகர், பாண்டியன், சங்கர், மீனா, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...